பேராசிரியர் கிளேம், தமிழர் போராட்டங்கள், அரசியல் ஆட்சி மற்றும் இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய நிலைமைகள் குறித்த தனது 20 ஆண்டுகால கள ஆய்வின் அனுபவம் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணை வேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்துகொண்டு, புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து அறிமுக உரையினையும் நூல் விமர்சனத்தையும் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், கிளேம் அவர்களின் இப்புத்தகம் இலங்கையின் இன மோதல், உள்நாட்டுப் போர், போருக்குப் பிந்தைய மாற்றங்கள் மற்றும் தென்னாசிய அரசியல் குறித்து வெளியான நூல்களுள் பிரதானமானது எனவும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நுணுக்கமாகவும் அறிவார்ந்த விதத்திலும் ஆராய்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் இந்நூலின் தனித்துவமான நோக்கம் மற்றும் அதன் விரிவான ஆய்வியல் விபரங்கள் இலங்கையின் மாறிவரும் அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள உதவுவதுடன் எதிர்கால ஆய்வாளர்களுக்கான ஆதாரமாகவும் அமைகின்றது எனக் குறிப்பிட்டார். எனினும் சாதாரண வாசகர்கள் பூரணமாக விளங்கிக் கொள்வதில் சில கடினத்தன்மைகள் இருப்பதனையும் அடையாளப்படுத்தினார்.
நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை அரசியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு வி, கமலசிறி வழங்கியதையடுத்து, பேராசிரியர் பார்ட் கிளேம் தனது புத்தகம் பற்றிய கருத்துக்களை முன்வைத்திருந்தமை சிறப்பம்சமாகும். மேலும் இந்நிகழ்வில் ஆராய்ச்சியாளர்களும் கல்வியியலாளர்களும் கலந்துகொண்டு, தமிழ் அரசியல் பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக, ஆங்கில விரிவுரையாளர் இல்பாவின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
0 comments :
Post a Comment