பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தினர். எனவே, தற்போது 2 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் 10.11.2024 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் . இதன்போது உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,
" ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மலையக மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்கீழ்தான் மலையக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் காலங்களில் மலையகத்துக்கு பல சேவைகள் செய்யப்பட்டுள்ளன. ஜீவன் தொண்டமான் அமைச்சராக மலையகத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் வேலை செய்துள்ளார்.
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி கோருகின்றார். அவர்களின் வேட்பாளர்கள் யாரென்றுகூட தெரியவில்லை. அபூர்வ மனிதன்போல்தான் உள்ளனர். ஜி.பி.ஆர்.எஸ்.மூலம்தான் மாவட்ட எல்லைகளைத் தேடுகின்றனர்.
பாராளுமன்றத்தை கள்வர்களின் குகை என்கிறார்கள், ஆனால் கள்வர்களை பிடிப்பதற்குரிய சட்டங்கள் எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
வாழ்க்கைச்சுவை தற்போது அதிகரித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றார்கள், தயவுசெய்து அந்த சம்பள உயர்வை வழங்குமாறு கோருகின்றோம். நாம் அடிப்படை சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரித்து கொடுத்தோம்.
பெருந்தோட்டங்களை கிராமங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். பெருந்தோட்ட நிர்வாகங்களின்கீழ் இருந்து தோட்டங்களை விடுவித்து, தேவையான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகி வந்தோம்.
அனுபவம்மிக்கவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட எமது பக்கம் உள்ளவர்கள் அனுபவம்மிக்கவர்கள். எனவே, நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தை வெற்றிபெற வைக்கவும். நுவரெலியாவில் இருந்து யானை சின்னத்திலும், ஏனைய பகுதிகளில் இருந்து சிலிண்டர் சின்னத்திலும் வேட்பாளர்கள் சபைக்கு வரவேண்டும்." - என்றார்.
0 comments :
Post a Comment