புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கண்டி மஹியாவ பகுதியில் 02.11.2024 அன்று மாலை தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்ற பின் கண்டி குயின்ஸ் கேட்போர் கூடத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் வர்த்தக பிரமுகர்களுடன் கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
' கண்டி மாவட்டத்தில் நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்தது முதல் இன்றுவரை கண்டி தமிழ் வர்த்தக சங்கம் எனக்கான அரவணைப்பையும், ஆதரவையும் வழங்கிவருகின்றது. அதேபோல கண்டி மாவட்ட மக்களும் எனக்கான ஆதரவை வழங்கிவருகின்றனர். அதனால்தான் பிரதான அதுவும் வெற்றிபெறக்கூடிய கட்சியொன்றில் வெற்றி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்.
அதுமட்டுமல்ல ஆளுமையுள்ள பெருந்தலைவரான ரவூப் ஹக்கீமும் எம்முடன் இருப்பது மேலதிக பலமாகும். எமது முஸ்லிம் உறவுகளும் நிச்சயம் எனக்கான ஆதரவை தருவார்கள் என்பது உறுதி. அதேநேரம் கண்டி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜரத்தினம் ஐயாவும் எனக்கான முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.
இன்று நாம் ஜனநாயக போரில் ஈடுபட்டுள்ளோம். எனவே, கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இல்லாது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் என்னையும், தலைவர் ரவூப் ஹக்கீமையும் நிச்சயம் பாராளுமன்றம் அனுப்பிவைப்பார்கள்.
கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க 2010 ஆம் ஆண்டு அடித்தளமிட்ட தலைவர் மனோ கணேசன் என்னை நேரடி வேட்பாளராக களமிறக்கியுள்ளமையும் எனக்கான பலமாக உள்ளது.
புதிய அரசமைப்பு நடவடிக்கை இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனவே, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்கள் நிச்சயம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அவர்களுக்கு பக்கபலமாக என்மையும் அனுப்பிவைக்க வேண்டும்.
இன அடையாளம், கல்வி மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்." -என்றார்.
0 comments :
Post a Comment