மாளிகா வீதியில் புரண்டோடும் வெள்ளம் : வீடுகளிலும் தஞ்சம் புகும் அபாயத்திற்கு பல ஆண்டுகளாக நிரந்தர தீர்வில்லை - உடனடி தீர்வுக்கு மக்கள் கோரிக்கை



நூருல் ஹுதா உமர்.
ல்முனை மாநகர சபை - காரைதீவு பிரதேச சபை எல்லை வீதியான மாளிகா வீதியில் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளநீர் தேங்கி நிற்கும் அவலம் இம்முறையும் தொடர்கிறது. காரைதீவு பிரதேச செயலகம்- சாய்ந்தமருது பிரதேச செயலகம். சம்மாந்துறை பொலிஸ்- கல்முனை பொலிஸ், சாய்ந்தமருது வைத்திய அதிகாரி காரியாலயம்- காரைதீவு வைத்திய அதிகாரி காரியாலயம், பொத்துவில் தேர்தல் தொகுதி- கல்முனை தேர்தல் தொகுதி என எல்லைகளை பிரிக்கும் இந்த வீதியில் மழைக்காலங்களில் பல மணிநேரம் பொதுமக்களும், வாகன சாரதிகளும் போக்குவரத்தில் ஈடுபடுவது கடினமாகவே அமைத்துள்ளது.

முறையான வடிகானமைப்பு கடற்கரை வீதிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாமையே இந்த நிலைக்கு காரணமாக அமைகின்றது. சிறியளவிலான மழை பெய்தாலும் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடமாக இந்த வீதி மாறியுள்ளது. எட்டு சிறிய வீதிகளின் மழைநீர் சந்திக்குமிடமாக உள்ள இந்த வீதியில் பள்ளிவாசல், இரண்டு பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், மக்களின் குடியிருப்பு, நாடுபூராகவும் மீன்களை விநியோகிக்கும் மீன்வாடிகள் என பல முக்கிய இடங்கள் அமைந்துள்ளது.

மாளிகைக்காடு ஜுனைட் வீதி, பைசால் வீதி, மாளிகா வீதி ஆகிய வீதிகளில் கடந்த ஒரு தசாப்தங்களாக முறையாக வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமல் மண், கல், குப்பைகள் அடைத்து கொண்டிருப்பதனால் மழைநீர் வடிந்தோட முடியாமல் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் நுழைகிறது. இதனால் சிறுவர்கள், முதியோர்கள் பல சகிக்க முடியா துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதே போன்றே சாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதி, குத்தூஸ் வைத்தியர் வீதி, மாளிகா வீதியின் நிலையும் காணப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்கும் போது தற்காலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் நிரந்தர தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வீதியில் வசிக்கும் மக்கள் மணல் மூட்டைகளை கட்டி தமது வீடுகளுக்குள் மழைநீர் வராமல் அணைகட்டி பாதுகாக்கின்றனர். மிகவும் சன நெரிசல் கூடிய இந்த வீதியில் பிரதான சாலைக்கு நிகரான வாகன போக்குவரத்தும் அதிகம். அதே போன்று வர்த்தக நிலையங்களுக்குள் மழைநீர் புகுவதனால் பல வகையான நஷ்டங்களை வர்த்தகர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இனி எதிர்கொள்ளப்போகும் மழைக்காலத்தில் படகுகள் மூலமே பயணிக்கும் அபாய நிலை உள்ளது.

மாளிகைக்காடு லெனின் வீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள தோணா, அல்- ஹுசைன் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள தோணா, சாய்ந்தமருது அல்- ஹிலால் வீதியில் அமைந்துள்ள தோணா, சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தோணா, சாய்ந்தமருது களப்பு ஆகியவற்றில் படர்ந்துள்ள சல்பினியா வகை தாவரங்கள், குப்பைகள், கற்கள், மரக்குற்றிகள் என்பன அகற்றப்படுவதன் மூலம் இந்த வீதியில் பல மணித்தியாலயங்களுக்கு மழைநீர் தேங்காமல் தவிர்க்கமுடியும். அத்துடன் மாளிகைக்காடு ஜுனைட் வீதி, பைசால் வீதி, மாளிகா வீதி, சாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதி, குத்தூஸ் வைத்தியர் வீதி, மாளிகா வீதி ஆகியவற்றில் உள்ள வடிகான்களை துப்பரவு செய்து அதனுள் இருக்கும் மண், கல், குப்பைகளை அகற்றுவதன் மூலம் வடிகானுக்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் மழை நீர் செல்வதை தடுத்து அங்கு வாழும் சிறுவர்கள்,முதியோர்களுக்கு நிம்மதியை வழங்க முடியும்.

காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், சாய்ந்தமருது வைத்திய அதிகாரி காரியாலயம், காரைதீவு வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றன ஒன்றிணைந்து உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நிரந்தர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. சில மணித்தியாலயங்கள் மட்டுமே தேங்கி நிற்கிறது. பின்னர் வடிந்து சென்றுவிடும் என கதைசொல்லி இந்த விடயத்தை இனிமேலும் கிடப்பில் போட முடியாது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை, மலேரியா, டெங்கு, உட்பட பல நோய்கள் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் இந்த காலகட்டத்தில் இந்த விடயமும் அப்பிரதேச வாழ் மக்களுக்கும் சுகாதார தரப்பினருக்கும் பாரிய தலையிடியாக மாறாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :