வி.ரி.சகாதேவராஜா-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நான் பாராளுமன்ற உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் தரம் உயர்த்தாவிடின் நிச்சயமாக பதவி துறப்பேன்.
இவ்வாறு சேனைக்குடியிருப்பில் இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
குறித்த கூட்டம் நேற்று மாலை சேனைக்குடியிருப்பு ஆற்றங்கரை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் பேசுகையில் ..
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் சவாரியில் வலம் வந்த கருணா அதை மகிந்த அஜன்டாவில் நிறைவேற்றிக் காட்டினார் .
இம்முறை ஒற்றுமை என்று வந்த எம்மவர் அந்த பாணியில் ஈடுபடுகின்றார்கள். அது சரி வராது. கடந்த 35 வருட காலமாக தேசிய பிரச்சனையை பேசி மக்களிடம் வாக்கு பெற்றவர்கள் மக்களின் பிரச்சினை தீர்த்து வைக்காதது அதற்கு காரணம்.
6 கிராம சேவையாளர் பிரிவு உள்ளடக்கிய இறக்காமத்திற்கு ஒரு பிரதேச செயலகமா என்றால் 29 கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்ட 39 ஆயிரம் தமிழ் மக்கள் வாழும் பெருநில பரப்புக்கு இரண்டு பிரதேச செயலர் பிரிவுகள் இரண்டு பிரதேச சபைகள் நிச்சயம் வேண்டும் .
ஆனால் ஒரு பிரதேச செயலகத்தைக் கூட முறையாக பெற முடியாத சூழல் இருந்து வந்திருக்கின்றது. கடைசி ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத நிலைமை இருந்திருக்கின்றது.
ஆனால் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.நான் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் அந்த பணி நிச்சயம் பூர்த்தியாகும். இல்லாவிட்டால் எனது பதவியை துறக்கவும் தயங்க மாட்டேன்.
இங்கு அரச பயங்கரவாதம் அம்பாறை மாவட்ட தமிழருக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு இருக்கின்றது .அதனை அடித்து உடைத்து அதனை முன் செல்ல வேண்டுமாக இருந்தால் நிச்சயம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தான் முடியும்.
இதுவரை சரியான பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யாதது காரணம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
எனவே சொந்தம் பந்தம் என்று சங்குக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.சங்கு ஒருபோதும் வரப் போவதில்லை.
எனவே நிச்சயமாக தெரிவாகும் வீட்டுக்கு வாக்களித்தால் மட்டுமே எமது வாழ்க்கை வளமாகும்.
588 கோடி ஊழலுடன் 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் வலம் வருகிறார் ஒருவர். கடந்த காலங்களிலே கொரோனா மற்றும் வெள்ள நேரங்களில் இவர்கள் எங்கு சென்றார்கள்? எங்கே இந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்?
கப்பல் போய் படகு வந்திருக்கிறது .சில வீணாய்ப் போனவர்கள் வீணை வாசிக்க வந்திருக்கிறார்கள். அவர்கள் கூலிவேலை செய்தவர்கள் முதல் அனைவருக்கும் என்ன செய்தார்கள் என்பதை உலகறியும்.
இம்முறை எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடாது .
தமிழருக்கு தலைவன் காட்டிய சின்னம் வீட்டுச் சின்னம்.
சிலர் வீட்டுக்குள் பிரச்சினை என்கிறார்கள். பாரிய கட்சியில் பிரச்சனை வருவது வழமை . பிரச்சனையை சரி செய்வது எமது திறமை.
எனவே வீட்டுக்கு வாக்களித்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள். என்றார்.
0 comments :
Post a Comment