மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர்,
பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவலுகள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.
26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.
தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?
எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.
ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.
0 comments :
Post a Comment