' தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை தேடிவரும் பருவகால பறவைகள் நாம் அல்லர். வென்றாலும், பின்னடைவை சந்தித்தாலும் மக்களுடன் தான் இருக்கின்றோம். மக்களுக்கான எமது பயணம் தொடரும்."- என்று அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் காரியாலயம் ஹட்டன் சக்தி மண்டபத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அனுஷா மேலும் கூறியவை வருமாறு,
' பொதுத்தேர்தலென்பது அநுர சுனாமியென்றே கூறவேண்டும். அந்த சுனாமியில் பிரதானக் கட்சிகளெல்லாம் அள்ளுண்டுச்சென்றன. பல வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் காணாமல்ஆக்கச்செய்யப்பட்டனர். அப்படி இருந்தும் நுவரெலியா மாவட்டத்தில் எனக்கு 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டன. சொற்ப அளவான வாக்குகள் வித்தியாசத்திலேயே நாடாளுமன்ற ஆசனம் கைநழுவிபோனது.
இதனை நான் தோல்வியாக கருதவில்லை. தற்காலிக பின்னடைவு மாத்திரமே. எனது தந்தைமீதுள்ள மதிப்பால் என்னையும் நம்பி வாக்களித்த மக்களுக்கு மிக்க நன்றிகள். என்னோடு தோளோடு தோளாக நின்று செயற்பட்ட தந்தையின் நண்பர்கள், தோழர்கள், செயற்பட்டாளர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.
அதேபோல வதந்திகளை பரப்பி எமக்கான வாக்குகளை குறைப்பதற்கான சதிகளும் முன்னெடுக்கப்பட்டன. நிச்சயம் தற்போது உண்மை என்னவென்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கும். எனது தந்தை மக்களுக்காக மக்கள் அரசியலை முன்னெடுத்த தலைவர். சலுகைகளுக்காக மக்களை அடகு வைத்தது கிடையாது. எனவே, நாம் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை தேடிவரமாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு ஓடிவிடவும் மாட்டோம். வென்றாலும், பின்னடைவை சந்தித்தாலும் மக்களுக்காக அரசியல் செய்வோம். அது மக்கள் நல அரசியலாக இருக்கும்." - என்றார்.
0 comments :
Post a Comment