அவ்வாறான சூழ்நிலையில் ரஷ்யா, ஈரான், துருக்கி போன்ற நாடுகள் அடங்கலாக கட்டாரில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதன் பின்பு ரஷ்யா விமான தாக்குதலை நிறுத்தியது. ஹிஸ்புல்லாஹ்வும், ஈராக்கிய படைகளும் சிரியாவுக்குள் செல்லவில்லை. அத்துடன் சிரியாவில் நிலைகொண்டிருந்த ஈரானிய படையினர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.
சிரியாவை கைப்பற்ற முன்னேறிவரும் போராளி இயக்கங்களை எதிர்த்து ரஷ்யா, ஹிஸ்புல்லாஹ், ஈராக், ஈரான் படையினர் மற்றும் ஈரான் ஆதரவுபெற்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து எதிர்தாக்குதல் நடாத்தியிருந்தால், சிரியா மற்றுமொரு கொலைக்களமாக மாறுவதுடன், காசாவில் பாலஸ்தீன் போராளிகள் இஸ்ரேலுடன் போரிட்டுவருகின்ற இந்த காலகட்டத்தில் இந்த போர் இஸ்ரேலுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்பதனை அறிந்துதான் ஈரான் சிரியாவில் போரை தவிர்த்தது.
ஹிஸ்புல்லாஹ்க்களுடன் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் செய்வதற்கு முன்பே காசா போரை திசைதிருப்பி சிரியாவில் சியா - சுன்னி வன்முறையை உருவாக்குவதற்காகவே துருக்கி மூலமாக அமெரிக்கா இந்த சதித்திட்டத்தை மேற்கொண்டதாக ஈரான் நம்புகின்றது.
ஆனால் போராளிகளிடம் சிரியா வீழ்ந்தபின்பு இஸ்ரேலிய படைகள் சிரியாவுக்குள் ஊடுருவுவார்கள் என்றும், இராணுவ நிலைகளை தாக்கி அழிப்பார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஈரான் சார்புடையோர் சிரியாவில் போரை தவிர்த்தது இஸ்ரேலுக்கு ஏமாற்றமாகும்.
ஈரானின் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் ஏற்பட்டபோதும், பாகிஸ்தானிலிருந்து ஈரானுக்குள் ஏவுகணை வீசப்பட்டபோதும், அசார்பைஜான் எல்லையில் பதட்டம் ஏற்பட்டபோதும் ஈரான் வலிந்து சென்று பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்தியது. இவைகள் அனைத்தும் சகோதர சண்டைகளை ஈரான் தவிர்த்து வருவதனை காண்பிக்கின்றது.
உக்ரைன் போரில் ரஷ்யா ஈரானை நம்பியுள்ளது. அதாவது மாதாந்தம் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை தயாரித்து ஈரான் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்ற நிலையில், ஈரான் பலயீனமாக உள்ளதன் காரணமாகவே சிரியாவில் போரை தவிர்த்தது என்று யூதசார்பு ஊடகங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment