கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக குணநாதன் நியமனம்!


அபு அலா-

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தர் கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான கடிதத்தை கடந்த 11 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர வழங்கி வைத்தார்.

யாழ். தெல்லிப்பழை குமாரசிங்கம் - பூலோகேஸ்வரி தம்பதிகளுக்கு 1973 ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பிறந்த இவர், தனது பாடசாலைக் கல்வியை மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திலும் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

1995 - 1998 ஆம் ஆண்டுவரை வவுனியா கல்விக் கல்லூரியில் தனது ஆசிரியர் பயிற்சியை அதி சிறப்பு சித்தியுடன் முடித்து வெளியேறிய இவர், 1999 - 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை யாழ். கல்வி வலய கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.

2001 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் (வணிகம், புவியியல், அரசியல்) விஷேட பட்டப்படிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் முடித்துவிட்டு 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்நுழைந்து, தனது நிர்வாக சேவைப் பணியை இணைந்த வடகிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துச் செயற்பட்டார்.

2004 ஆம் ஆண்டு நவம்பர்
முதல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை வடகிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றி அவர்,
அதேயாண்டு திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நியமனம்பெற்று சுமார் 08 வருடங்கள் உள்ளுராட்சித்
துறைக்கு பாரிய பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும், உலக வங்கியின் சமூக குடிநீர் வழங்கல் செயற்றிட்டத்தின் திருகோணமலை மாவட்ட மேற்பார்வை மதிப்பீட்டு அதிகாரியாகவும், பதில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவும் 2009 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார்.

2010 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பொது நிர்வாக டிப்ளோமா பாடநெறியை முடித்த அவர், அதே பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணிப்பட்டத்தையும் 2012 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

இக்காலப்பகுதியில் 2010 - 2013 வரை உலக வங்கியின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புறநெகும / நெல்சிப் திட்டத்தில் மாவட்ட திட்டப் பணிப்பாளராகவும், ஜெய்க்கா ஜப்பான் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமிய குடிநீர் விநியோகத்திட்டத்தில் மாவட்ட திட்ட முகாமையாளராகவும் செயற்பட்டார்.

2013 - 2015 ஆண்டு வரை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் பதில் செயலாளராகவும் கடமையாற்றினார்.

2015 - 2017 ஆம் ஆண்டு வரை
கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராகவும், 2017 - 2018 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும், 2018 - 2021 ஆம் ஆண்டு வரை திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளராகவும், 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நியமனம் பெறும்வரை திருகோணமலை குச்சவெளிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.

கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச மாநாடுகளிலும், எமது நாட்டிலும் இடம்பெற்ற சிறப்பு பயிற்சிகளில் பங்கு பற்றி அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம் எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்புத் தேர்ச்சிமிக்க வளவாளராகவும் செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம், இலங்கை உள்ளூராட்சி நிறுவகம், மாகாண முகாமைத்துவ பயிற்சித் திணைக்களம், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு, ஆசியா மன்றம், கொமன்வெல்த் உள்ளூராட்சி அமையம் உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்றிட்ட ஆலோசகராகவும், திட்ட வளவாளராகவும் இற்றை வரை செயற்பட்டு வருகின்ற சிறந்த நிர்வாக அதிகாரியாக இருந்தும் வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :