யாழ் மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தையும், அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்று தோல்வியடைந்ததுடன், NPP யாழில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் நான்கு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களையும் வெற்றி கொண்டது.
அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய இரு மாவட்டங்களும் முஸ்லிம், தமிழ் ஆகிய சிறுபான்மை சமூகங்களின் மாவட்டங்கள் மட்டுமல்லாது அக்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றின் கோட்டைகளாகும்.
யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தோல்வியுற்று NPP வெற்றி பெற்றதனால் தாயகத்திலும், புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற தமிழர்கள் அதன் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இதன் பிரதிபலிப்புக்கள் தமிழ் ஊடகங்களில் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி தோல்வியடைந்தாலும், NPP மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவான மூன்று உறுப்பினர்களும் தமிழர்கள்.
ஆனால் யாழில் தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தும், தமிழரசு கட்சியின் தோல்விதான் இங்கே பிரதான பேசுபொருளாக உள்ளது.
ஆனால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்து NPP வெற்றியடைந்தாலும் அதற்குப் பதிலாக வெற்றிபெற்ற நான்கு உறுப்பினர்களும் முஸ்லிம்கள் அல்ல, மாறாக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிங்கள உறுப்பினர்கள். ஆனாலும் அதுபற்றி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எல்லோரும் கவலை கொண்டதாக தெரியவில்லை.
அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் NPP யில் முஸ்லிம்களின் வாக்குகளினால் பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவானார்கள் என்று கூறுவதனை இனவாதக் கருத்து என்று கூறுகின்றனர். இது அவர்களது அரசியல் அறிவை காண்பிக்கின்றது.
எனவே யாழ் மாவட்டத்தின் தோல்வியானது கட்சிக்கு மாத்திரமே தவிர தமிழ் மக்களுக்கல்ல. ஆனால் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டது கட்சிக்கும், முஸ்லிம் சமூகத்துக்குமான தோல்வியாகும்.
இவ்வாறான தோல்விகளிலிருந்து மீள்வதற்கு தோல்விக்கான காரனங்களை கண்டறிவதுடன், கட்சிக் கட்டமைப்பிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது பழமைவாய்ந்த இரு கட்சிகளுக்குமுள்ள கடமையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment