பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அஹமட் லெப்பை அன்சார் (வயது-45) என்பவரின் வீட்டின் மீது கடந்த 2024.11.30 இரவு கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த 2024.12.01 ஆந்திகதி அன்று பாதிக்கப்பட்டவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதன் போது தாக்குதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் மருதூர் அன்சார் தனக்கு அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் செய்ததாகவும் பின்னர் இவ்வாறு வீட்டின் மீது மேற்கொண்ட கழிவு ஒயில் தாக்குதலில் வீட்டின் நுழைவாயில் உட்பட சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
இது தவிர முகநூலில் சில தவறான விடயங்களை உட்செலுத்தி சில நபர்கள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே கல்முனை மாநகர சபையில் முன்னாள் உறுப்பினராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment