நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை(1) மாலை சமூக, பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமைப்பின் (OSEED) ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட 100 குடும்பங்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய 50 குடும்பங்களும், மொத்தமாக 150 குடும்பங்கள் உதவிபெற்றன.
இந்நிகழ்வானது ஓசீட் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், சட்ட முதுமாணி மற்றும் சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பி.ரி.ஏ. ஹசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக நிந்தவூர் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயீஸ் , பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நிந்தவூர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் , ஓசீட் அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலால் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.
ஓசீட் அமைப்பின் 25ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம். முர்ஷித் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
இந்த விழாவினால் சமூகநலத்திற்கான ஓசீட் அமைப்பின் அர்ப்பணிப்பும், நிந்தவூர் பிரதேசத்தின் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையேயான ஒற்றுமையும் மேலும் வலுப்பெற்றுள்ளன.
--
0 comments :
Post a Comment