உலகில் உள்ள மூன்று புனித ஸ்தளங்களான மஸ்ஜிதுல் ஹரம் (மக்கா), மஸ்ஜிதுன் நபவி (மதினா), மஸ்ஜிதுல் அக்ஸா (ஜெரூசலம்) ஆகியவற்றுக்கு இல்லாத சிறப்பு அமெரிக்கா உட்பட உலகின் எந்தவொரு பள்ளிவாசல்களுக்கும் இல்லை என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் நான்காவது ஹலீபாவான அலி (ரலி) அவர்களின் புதல்வர் ஹசன் (ரலி) அவர்களினால் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் விட்டுக்கொடுத்து ஆட்சிப்பொறுப்பை முஆவியாவிடம் ஒப்படைத்தார். முஆவியாவின் மரணத்துக்கு பின்பு அவரது புதல்வர் யசீத் என்பவனுக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைக்கின்றது.
குடும்ப வாரிசு ஆட்சியை அப்துல்லாஹ் இப்னு சுபைர் உட்பட பல நபித்தோழர்கள் ஏற்க மறுத்ததுடன், யசீதின் ஆட்சிக்கு கட்டுப்படாமல் ஹிஜாஸ் பகுதியான மக்கா, மதினா, தாயிப் ஆகிய பிரதேசங்களை அப்துல்லாஹ் இப்னு சுபைர் (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார்.
நாங்கள் முஸ்லிம்களுக்கு சூனியம் செய்துவிட்டோம் இனிமேல் அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று யூதர்கள் பெருமை பேசிக்கொண்டிருந்தபோது ஹிஜ்ரத் ஆண்டு கூபாவில் முதலாவதாக பிறந்தவர்தான் அப்துல்லாஹ் இப்னு சுபைர் (ரலி) ஆகும். இவர் முதலாவது ஹலீபா அபூபக்கர் ரலியின் பேரனாவார்.
இவருக்கு எதிராக போர் செய்வதற்கு யசீதின் படைகள் மக்காவை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்தியபோது தாக்குதலில் புனித கஹ்பா தீப்பற்றியதுடன், ஹஜருல் அஸ்வத் கல்லும் மூன்றாக வெடித்தது. இது நடைபெற்றது ஹிஜ்ரி 64 இல் ஆகும்.
உலகின் முதலாவது இறை இல்லமான புனித கஹ்பாவுக்கே சேதத்தை ஏற்படுத்த முடியுமென்றால், ஏனையவைகள் ஏன் சேதமடையாது என்ற கேள்வி எழுகின்றது. உலக முடிவு நெருங்கும்போது கஹ்பா இடிக்கப்படும் என்று முன்னறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.
எனவேதான் உலகில் உள்ள எந்தவொரு பொருளையும் அழிக்க முடியும். மத ஸ்தளங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அனர்த்தங்களில் ஒரு கட்டிடம் அழியாவிட்டால் அக்கட்டிடங்களில் உள்ள உறுதி அல்லது தாக்குதலில் உள்ள பலயீனத்தை பற்றி பார்க்காமல் எடுத்த எடுப்பில் அற்புதம் நடந்துள்ளது என்று நம்புவது எமது ஈமானிய பலயீனமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment