சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (28) திடீர் பரிசோதனை செய்யப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் இந்த திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள உணவு கையாளும் நிறுவனங்கள், வியாபார நிலையங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சுகாதார நிலைகளை ஒழுங்காக பேணாத வர்த்தகர்களுக்கு எச்சரிக்கையும், அறிவுறுத்தலும் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி இதன்போது தங்களது சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் வைத்திருந்தவர்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல். ஜெரின் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் முறையான அனுமதி பத்திரம் இல்லாத உணவகங்கள், வைத்திய சான்றிதழ் இல்லாது உணவகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் முறையான கழிவு நீர் தொட்டி இல்லாத, குளிர்சாதனப் பெட்டிகள் முறையாக பராமரிக்காத, தனி நபர் சுகாதாரம் பேணாத, சமைக்கும் இடங்கள் சுகாதாரமாக பேணாத உணவகங்கள், பேக்கரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் இதன்போது தெரிவித்தார்.
0 comments :
Post a Comment