கல்வி, சமயம், சமூகம், சமாதானம் போன்ற பல்வேறு துறைகளில் தனது ஆளுமையைப் பதித்த புத்தளம் காசிமிய்யா அறபுக் கல்லூரி அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவருமான அஷ்ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மரணமானது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே பேரிழப்பாகும் என்று சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் பிரதித் தலைவரும் சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக் கல்லூரி அதிபருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இனங்களுக்கிடையிலான சமாதானப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டார்.
வடக்கிலே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 2007 டிசம்பரில் யாருமே யாழ்ப்பாணம் செல்லத் துணியாத காலத்தில் நாங்கள் இருவரும் அங்கு நடைபெற்ற சர்வதேச சமாதான மகாநாட்டுக்குச் சென்றிருந்தோம். ஜப்பானின் முன்னாள் வெளி விவகார அமைச்சர் யசூசி அகாசி கலந்து கொண்ட அம்மகாநாட்டில் சமாதானத்துக்கான எமது பங்களிப்புக்களை வழங்கினோம்.
அதேபோல் 2008 ஆம் ஆண்டு திருமலையில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டிலும் உலகத் தலைவர்கள் பலருடன் சேர்ந்து கலந்து கொண்டதுடன் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்;ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நானும் அப்துல்லாஹ் ஹஸரத், சுப்யான் மௌலவி, நியாஸ் மௌலவி போன்றோரும் கலந்து கொண்டிருந்தோம்.
இவ்வாறு அவரது பணிகளும் பயணங்களும் அதிகமானவை.
அப்துல்லாஹ் ஹஸரத் சமாதானப் பேரவையுடன் இணைந்து பல்வேறு சமாதானப் பணிகளில் ஈடுபட்டார். பிற சமூகத்துடன் நல்லபிப்பிராயத்தை வளர்த்தார்.
எமது பிரதேசத்தில் சுனாமிப் பேரலை ஏற்படுத்திய அழிவின்போது பல்வேறு உதவிகளில் ஈடுபட்டார்.
மதீனாப் பல்கலைக்கழகத்தில் நாம் ஒன்றாகப் பயின்றோம். உலமா சபையின் பணிகளில் ஒன்றிணைந்து செயலாற்றினோம். அறபுக் கல்லூரிகளில் அதிபர் பதவிகள் வகித்தோம்.
கடந்த மாதம் அவரது வீடு வருவதாக நான் கூறியபோது இது போன்ற மகிழ்ச்சிகரமான செய்தி எனக்கில்லை என்று அவர் கூறியது அவரின் விருந்தோம்பலின் சிறப்பை எடுத்துக்காட்டியது. அவர் வீட்டில் நாம் உணவருந்தியபோது அவருக்கு இயலாத நிலையிலும் பக்கத்தில் வந்து நின்றார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தோடு எமது தைபா அறபுக் கல்லூரிக்கு வந்துபோனார்.
நாட்டு நடப்புக்களை வாராந்தம் என்னோடு கலந்துரையாடும் நல்ல நண்பரை இழந்து விட்டேன். பணிவும் பண்பும் நிறைந்த அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் பிரிவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அதுவே நடந்தேறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றங் குறைகளை மன்னித்து உயரிய சுவனத்தில் அவரைக் குடியிருக்கச் செய்வானாக!
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் பொறுமையையும் அளிப்பானாக!
0 comments :
Post a Comment