ரவூப் ஹக்கீமின் பிரேரணைக்கு பதறிய அரசு



எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)- ஓட்டமாவடி-
ட்சிபீடமேறுவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறிய பின்னர் வாக்குறுதிகளுக்கு என்னாச்சு? எனக்கேட்டால் கதை சொல்லி மழுப்புவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

வாங்குரோத்தடைந்து வீழ்ந்த நாடு என்று அறியாமலா அவ்வளவு வீர வசனங்களை தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளாக முழங்கினார்கள்? வென்ற பின்னர் எதையெல்லாம் கடந்த அரசாங்கத்தின் பிழை என்றாரர்களோ, அதனையே பின் தொடர்வதைக்காண முடிகின்றது.

தேங்காய், அரசி, உப்பு என்ற வரிசையில் மீனும் இறக்குமதி செய்ய வரும் என்றளவுக்கு அமைச்சர்கள் கருத்துத்தெரிவிப்பதையும் தட்டுப்பாட்டுக்கான காரணங்களாக ஆட்சியாளர் சொல்லும் காரணங்களும் நகைப்புக்குரியது.

நேற்று ஒன்று நாளை வேறொன்று என மாற்றி மாற்றி கதை சொல்லும் அரசாங்கத்தின் அண்மைக்கால போக்கை அவதானித்த ரவூப் ஹக்கீம், முக்கியமான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். இதனால் அடிக்கடி ரவூப் ஹக்கீமோடு அரச தரப்பு மோதிக் கொள்வதைப் பார்க்கலாம்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிப்பதற்கு ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் தொடுத்த கேள்வி தான் காரணமாக அமைந்தது.

வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நஷ்டயீடு விவகாரத்திலும் அரசாங்கம் முன்னர் அறிவித்த தொகையை விட மேலும் அதிகரிக்க முன்வந்ததுக்கும் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பேச்சுக்களே காரணமாக அமைந்தது.

அதேநேரம், ரோஹிங்கிய அகதிகள் விடயத்திலும் அரசாங்கத்தின் போக்கு முன்னைய அரசாங்கத்தின் போக்கை விட மாற்றமாக இருந்ததுடன், ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் அரச உயர் தலைவர்களின் கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமென்பதோடு ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரில் அனுபவிக்கும் கொடுமைகளை உணர்ந்து அவர்கள் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அண்மையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்தார்.

குறித்த பிரேரணையில் ரோஹிங்கிய அகதிகள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது அவர்களை பத்திரமாக மீட்டு வந்த இலங்கை கடற்படைக்கு தனது கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்ததோடு, கடந்த காலங்களிலும் இவ்வாறு கொடுமைக்குள்ளாகி உயிர் வாழும் நோக்கில் வெளிநாடுகளை நோக்கிச்சென்ற ரோஹிங்கிய அகதிகள் திருப்பியனுப்பப்பட்ட நிலையில் இலங்கைக்கு வந்த அகதிகள் விடயத்தில் கடந்த ஆட்சியாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி, ஐக்கிய நாடுகளின் (சமவாயங்கள்) தொடர்பாகவும் கவனஞ்செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

இவ்விடயங்களைப்பேசும் போது அரசாங்கம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டில் மாற்றங்கள் வந்திருக்குமென நம்புவதாகவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இதற்கு தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அரசாங்கம் ரவூப் ஹக்கீம் இனவாதம் பேசியது போன்று அரச தரப்பு உரைகளை ஆற்றியதை காண முடிந்தது.
உண்மையில் அரச தரப்பு ஒவ்வொரு கருத்தாக வெளியிட்டுக்கொண்டிருப்பதால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவும், ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கும் அனுப்புவதால் ஏற்படும் விளைவுகளையுமே தெளிவுபடுத்துவதாக தனது பிரேரணையைக் கொண்டு வந்த நிலையில், அரசாங்கம் தாங்கள் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என்று சொல்லிக்கொண்டாலும் முஸ்லிம்கள் விடயத்தில் (அமைச்சரவை நியமனம் உட்பட) அரசாங்கத்தின் செயல் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லையென்ற விமர்சனம் இந்த அரசாங்கத்தை ஆதரித்த முஸ்லிம் மக்கள் வெளிப்படுத்துவதைக்காண முடிகின்றது.
அது போன்று ரோஹிங்கிய அகதிகள் முஸ்லிம்களாக இருப்பதால் அரசாங்கம் அவர்களைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்ப முற்படுகிறதா? என்ற கேள்வியும் அரச முக்கிய அமைச்சர்களின் கருத்து வெளியீடுகளும் அதனை அடிப்படையாகக்கொண்டு ஏனையவர்களும் குறித்த அகதிகளை ஆபத்தானவர்களாக சித்தரிக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.

இந்நிலையில் குறித்த பிரேரணை அரசாங்கத்திற்கு ரவூப் ஹக்கீம் மீது கோபத்தை ஏற்படுத்தவே அரச தரப்பு பாராளுமன்றத்தில் கொந்தளித்தது.

இதனைப்பார்க்கும் போது சில விடயங்களை உணர முடிந்தது. அரச தரப்பில் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் செயற்பாட்டை நியாயப்படுத்தவும் அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களாகவும் இருப்பார்கள் என்ற தேர்தல் காலங்களின் முன்வைத்த கருத்தை உண்மைப்படுத்துவதாகவே காண முடிந்தது.

இவ்விவாதத்தில் பேசிய அரச தரப்பு குறித்த பிரேரணை இனவாத நோக்கம் கொண்டதாகச் சித்தரிக்க முற்பட்டதோடு, ரோஹிங்கிய அகதிகளைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்பும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என்ற விடயத்தைச் சொன்னார்கள்.

அப்படியென்றால், ரவூப் ஹக்கீம் ஏன் பிரேரணை கொண்டு வர வேண்டுமென்ற கேள்வி வரலாம். அதற்கு அரசாங்க பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்ர பேசும் போது, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் மூன்று கருத்துக்கள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

ரோஹிங்கிய அகதிகளைத்திரும்ப மியன்மாருக்கு அனுப்புதல், நாட்டில் வைத்திருத்தல், பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புதல் போன்ற கருத்திருந்ததாகவும், இது கருத்து மாத்திரமே. தீர்மானமில்லை என்பதோடு, ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பமாட்டோம் என்ற செய்தியையும் சொன்னார்.

அரச முக்கிய தலைவர்களிடமும் அமைச்சர்களிடமும் ரோஹிங்கிய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பும் எண்ணமொருப்பதை அறிந்ததால் அதை அரசாங்கம் தீர்மானமாகக் கொண்டு வந்து விடக்கூடாதென்ற நோக்கத்தில் மனிதாபிமான அடிப்படையில் தான் ரவூப் ஹக்கீம் குறித்த பிரேரணையைக் கொண்டு வந்தார்.

குறித்த பிரச்சினையை ரவூப் ஹக்கீம் மக்கள் மயப்படுத்தியதால் தாங்கள் குறித்த விடயத்தில் தீர்மானங்களை வெளியிட வேண்டிய ஒரு சூழலை ரவூப் ஹக்கீம் ஏற்படுத்தி விட்டார் என்பதனால் ஆத்திரமடைந்த அரச தரப்பு ரவூப் ஹக்கீமை நோக்கி விரல் நீட்டிப்பேசியதைக் காண முடிந்தது.

கடந்த ஆட்சிகளில் ஆளுங்கட்சியாக இருந்த போது அன்று வருகை தந்த ரோஹிங்கிய அகதிகள் அச்சுறுத்தலுக்குள்ளான போது என்ன செய்தீர்கள் என்றும் கேட்டார்.
உண்மையில் குறித்த கேள்விக்கு தக்கபதிலடியை ரவூப் ஹக்கீம் கொடுத்தார். அன்றைய காலகட்டங்களில் காத்திரமாக ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் செயற்பட்டதனால் தான் அவர்களுக்கெதிரான சதிகளை முறியடித்து பாதுகாத்ததை இவர்கள் மறந்திருக்கலாம் அல்லது நாம் இரண்டு மாதங்களுக்குள் கொடுத்த வாக்குறுதிகளையே மக்கள் மறந்து விட்டார்கள். இவைகளையா நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பேசியிருப்பார்கள்.
முஸ்லிம்கள் அதிகளவாக எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள். எங்கள் கட்சித்தான் முஸ்லிம் கட்சி என்று சொன்ன சபை முதல்வர், முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்? என உங்களுக்கு வாக்களித்த பெரும்பாலான முஸ்லிம்களை குறுகிய காலத்தில் உணரச்செய்தவர்களும் அவர்கள் தான் என்பதும் அவர்களது சாதனை தான்.

சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலிருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் ஆடை விடயத்தில் வெளியிட்ட கருத்துக்களை மறக்கவில்லை.

முஸ்லிம்களின் திருமண வயது விவகாரம் மீண்டு இந்த அரசாங்கத்திலும் ஆரம்பிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களுக்கு என்று எதையாவது கேட்கும் போது இலங்கையர்களாகப் பார்க்க வேண்டும். இன ரீதியாகப் பார்க்கக்கூடாதெனக் கூறிக்கொண்டு செயலில் இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்பதை அறியாத முட்டாள்களாக முஸ்லிம் சமூகமில்லை என்பதை அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியாக மக்கள் மத்தியில் செல்வதற்குப் பயந்து தேசிய மக்கள் சக்தியாக வந்தவர்கள், அனுர அலையில் பலரும் அள்ளுண்டு போன போது, தேர்தலில் போட்டியிடாது தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் பிரவேசித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அறிவாரோ முதல் முதலாக கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்டு ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் சென்றதை எனக்கேட்கிறோம்.

பாராளுமன்றத்தில் இவ்வாறு பேசி ரவூப் ஹக்கீமை மடக்கலாம் என அரச தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட போது, ரவூப் ஹக்கீம் தான் என்ன நோக்கத்திற்காக குறித்த பிரேரணையைக் கொண்டு வந்தாரோ அந்தத்தீர்மானத்தை அதாவது ரோஹிங்கிய அகதிகளைத் திரும்ப மியன்மாருக்கு அனுப்புவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடாக அரச தரப்பு சபைக்கு அறிவித்ததிலிருந்து ரவூப் ஹக்கீம் சாணக்கியமாக தனது பிரேரணையை வெற்றி கொண்டதைக்காண முடிந்தது.

முஸ்லிம்கள் அதிகளவாக தங்களுக்கு வாக்களித்து அதிக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் கட்சி எனப்பீத்திக் கொள்ளும் அரசாங்கம், கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த ஜனாஸா எரிப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அட்டுலுகம, அக்குறணை போன்ற பிரதேசங்கள் கொரோனா காலத்தில் முடக்கி பாதிப்புகளை ஏற்படுத்திய விடயங்கள் எனப்பல அநீதியான விடயங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நீதியைப்பெற்றுக் கொடுக்கப்போகிறார்களா? எனப்பார்க்க வேண்டும்.
அதே போன்று, பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் மனிதாபிமானத்தோடு ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் நடந்து கொள்கிறார்களா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :