அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேசிய காங்கிறசின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய காங்கிறஸ் நீதிமன்றத்தை நாடியது. நேற்று தீர்ப்பும் வந்தது. ஆனால் மக்கள் மத்தியில் குழப்பம் அதிகரித்திருக்கிறது. தேகாவின் ஆதரவாளர்களுக்குள்ளும் இது பற்றிய ஒரு தெளிவில்லாமல் இருப்பதனால் எல்லோருக்குமாக ஒரு தெளிவிற்காக மாத்திரமே இப்பதிவினை எழுதுகிறேன்.
தேசிய காங்கிறசின் வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது?
========================================
2023ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்றினை பாராளுமன்றம் ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் இளம் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் (பிரதானபட்டியலையும் நிரல் பட்டியலையும் சேர்த்து) கட்டாயம் இடம் பெற வேண்டும். 2023க்கு முன்னர் இளம் வேட்பாளர்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது அல்ல. அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு ஒரு கட்சியின் வேட்பு மனுவில் 35 வயதிற்கு குறைந்த 5 பேர் கட்டாயம் இடம் பெற வேண்டும். தேசிய காங்கிறஸ் 5 இளம் வேட்பாளர்களை வேட்பு மனுவில் உள்ளடக்கி இருந்தது.
அவர்கள்,
1.முசாதிக் சிறாப் அஹமட்
2. முஹம்மட் நபீர் பாத்திமா ஸராஹ்
3. மக்பூல் அஷீரா தானி
4. ஜார்தீன் நஜீரா
5. முகமட் சஹீர் பாத்திமா
இளம் வேட்பாளர்களினை எப்படி நிரூபிப்பது?
================================
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 28(4)(a) பின்வருமாறு கூறுகிறது.
““A certified copy of the birth Certificate of every youth whose name appears in the nomination paper or an affidavit signed by such youth, certifying his date of birth shall be attached to such nomination paper.
அதாவது இளம் வேட்பாளர் ஒவ்வொருவரினதும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியினை நியமனப்பத்திரத்தோடு இணைத்தல் வேண்டும். தே.கா இணைத்திருந்தது.
அப்படியானால் ஏன் நிராகரிக்கப்பட்டது?
============================
தேர்தல் ஆணையகம் ‘சான்றுப்படுத்தப்பட்ட பிரதி’ என்பது மேலதிக மாவட்ட பதிவாளரால் கையெழுத்திடப்பட்ட பிரதிதான் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி என்ற நிலைப்பாட்டில் உள்ளது.அது சம்பந்தமாக தேர்தல் ஆணையகம் சுற்று நிருபமும் வெளியிட்டிருந்தது.
தேசிய காங்கிறஸ் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் நிழற்பிரதிகளை சமாதான நீதவான ஒருவரால் சான்றுப்படுத்தி சமர்ப்பித்திருந்தது.
அதன் காரணமாக தேர்தல் ஆணையகம் 3 பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை ஏற்றுக் கொள்ளாததனால் தேர்தல் சட்டத்தின் பிரிவு 31(1)(f) கீழ் குறிப்பிட்டப்பட்ட 5 இளம் வேட்பாளர்கள் இல்லை என்பதனால் முழு வேட்பு மனுவையும் நிராகரித்தது.
தேசிய காங்கிறஸ் நீதிமன்றைத்தை நாடியது.
நீதி மன்றத்தில் என்ன நடந்தது?
======================
தெரிவத்தாட்சி அலுவலகரின் முடிவுக்கு எதிராக தேசிய காங்கிறஸ் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை ரிட் மனுவினூடாக நாடியது.
அதற்கான தீர்ப்பினை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியது.அதனடிப்படையில் பிறப்பு பத்திரம் தொடர்பாக நிராகரிக்கப்பட்ட மனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அலுவலகருக்கு கட்டளை இட்டது.
திடீர் திருப்பம்
==========
இப்பொழுதுதான் கதை சூடு பிடிக்கிறது.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்காக தேசிய காங்கிறஸ் உட்பட்ட பல கட்சிகள் மேன் முறையீட்டு நீதி மன்றத்திற்கு சென்ற வேளை சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் போன்ற கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அடிப்படை உரிமை வழக்குகளினூடாக நாடின. மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தேசிய காங்கிறஸ் போன்றோரின் வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளை உச்ச நீதிமன்றம் இன்னும் சில வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது.அதன் முடிவை உயர் நீதிமன்ற நீதியரசர் துரை ராஜா அவர்கள் நேற்று வழங்கினார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் துரை ராஜா அவர்கள் SC/FRA/68/25 என்ற வழக்கில் வழங்கிய முடிவுதான் இப்பொழுது தேசிய காங்கிறசுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
SC/FRA/68/25 என்ற வழக்கு வேறொரு கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மீறல் வழக்கு. தேசிய காங்கிறஸ் எதிர் கொண்ட அதே பிரச்சினையை எதிர்கொண்ட ஒரு கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. அதாவது இளம் வேட்பாளர்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தினை சமாதான நீதவானால் கைச்சாத்திட்டு தெரிவு அத்தாட்சி அலுவலகரால் நிராகரிக்கப்பட்டு வந்த வழக்கு இது.
(In SC/FRA/68/25, owing to the failure of the youth candidates to annex certified copies of their certificates of birth, the entire nominations list had been rejected for its failure to include the required number of youth candidates @ page 15)
இதன் முடிவினை நேற்று அறிவித்த நீதியரசர் துரை ராஜா அவர்கள் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் பிரிவு பிரிவு 56(1) அடிப்படையில் பதிவாளரால் அல்லது உதவிப்பதிவாளரினால் வழங்கப்படுகின்ற பிரதிதான் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி என்றும் சமாதான நீதவானால் வழங்கப்படுவது உண்மைப்படுத்தப்பட்ட பிரதி என்றும் தெரிவித்தார்.
( I find myself in agreement with the aforementioned views of Sathya Hettige, PC,J. While a Justice of Peace, a Commissioner for Oaths or an Attorney-at-Law may attest a document as a “true copy”, documents so attested does not amount to a “certified copy”. A certified copy must be obtained from the custodian of the original and must be certified by someone who is authorised to so certify. In any event, the Petitioners of the instant application have submitted mere photocopies and such copies can no way amount to certified copies.@page 19)
அதனால் SC/FRA/68/25 என்ற வழக்கில் அடிப்படை உரிமை பாதிக்கப்படாமையினால் Leave to Proceed வழங்கப்படாமல் வழக்கு
தள்ளுபடியானது.
இழுபறி நிலை
==========
இலங்கையின் உச்ச நீதிமன்றமாகிய அதி உயர் நீதிமன்றம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்த விடயத்தை சரி காண்கிறது. மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. இதுதான் இப்பொழுதுள்ள குழப்பம்.
அதாவது பிறப்புச் சான்றிதழ் குழப்பத்தில் உச்ச நீதிமன்றம் சென்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை. அதே பிரச்சினைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலை. இப்படி இரண்டு நிலைகள் இருக்க முடியாது.
என்ன நடக்கப்போகிறது?
===================
மேன்முறையீட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றம் செல்லலாம். செல்ல வேண்டும். ஏனெனில் ஒரே தன்மையான பிரச்சினைக்கு இரண்டு வகைத் தீர்ப்புக்கள் இருக்க முடியாது. அப்படி திங்கட்கிழமை செல்லப்போவதாகக் கேள்வி. அப்படி சென்றால் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இல்லாமலாக்கும். அதனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் இறங்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி நடந்தால் தே.காவால் தேர்தலில் குதிக்க முடியாத நிலை தோன்றும்.
அல்லது,
நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட கட்சிகள் 3 நீதியரசர்களின் தீர்ப்புக்கு எதிராக Full Bench க் கோரலாம். அதுவும் நடக்க விருப்பதாகக் கேள்வி.
நீதிமன்றங்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கப்போகின்ற என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments :
Post a Comment