கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (08) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் வருமான பரிசோதகர் எம்.எஸ்.எம். உபைதுல்லாஹ், விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் நஸ்ரின் ஹாஜா, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி. ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் அங்கு வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சுமூகத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகை நிலுவைகளை அறவிடுதல், வாடகைக் கட்டணங்களை சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கல்முனை மாநகர பொதுச் சந்தையினதும் வர்த்தகர்களினதும் நலன் கருதி கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வர்த்தகர் சங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று சங்கப் பிரதிநிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.
0 comments :
Post a Comment