நீதி நீர்த்துப் போகக் கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றக் கதவுகள் விடுமுறை நாள் ஒன்றில் தட்டித் திறக்க வைக்கப்பட்டிருக்கிறது.
இளம் சட்டத்தரணி நதிஹா அப்பாஸைப் பொறுத்தவரை, மார்ச் 28 ஆம் திகதி, வழக்கமான நாளாகவே தொடங்கியது.
அவர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் அன்றைய வழக்குகளைக் கையாளுவதில் மும்முரமாக இருந்தார். அப்போது தான் அந்த பரபரப்பான தகவல் அவரது காதை எட்டியது.
சக சட்டத்தரணி பிரியங்கா உதயங்கனியை சிறைக்கு அனுப்பப்படுவதற்காக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்த செய்தியாகும். திகைத்துப்போன நதிஹா, விபரம் கேட்டறிய புத்தளம் மேல் நீதிமன்றம் விரைந்தார்.
இந்த பிணக்கின் ஆரம்பப் புள்ளி சென்ற வருடம் ஆகஸ்ட் மாதமாகும்.
அப்போது ஒரு வழக்கில் ஆஜரான சட்டத்தரணி பிரியங்காவின் நடவடிக்கை தொடர்பில், புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி "நதி அபர்ணா" அதிருப்தி கொண்டிருந்தார் .
அதே வழக்கு மீண்டும் இவ்வருடம் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி, குறித்த சட்டத்தரணி தொடர்பில் முன்னைய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
இதன் பின்னர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி, நீதிபதி நதி அபர்ணா, "நீதிபதிக்குரிய மரியாதை வழங்கப்படவில்லை" என்றும்,
"குறித்த தினம் நீதிமன்ற அறைக்குள் பிரவேசிக்கும் போது, தலை வணங்கவில்லை" என்றும்,
இரண்டு குற்றச்சாட்டுகளைச் சட்டத்தரணி பிரியங்கா மீது சுமத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் பிரியங்கா கைது செய்யப்பட்டு,
பிணை நிபந்தனையாக ரூபா 25 இலட்சம் சொத்து மதிப்பு சான்றிதழுடன் இரண்டு சரீர பிணையாளிகள் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்.
இவ்வாறான ஒரு நிபந்தனை அன்றைய நீதிமன்ற நேரத்துக்குள் பூர்த்தி செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதாக இருந்தது.
இதன் பொருள், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆக இருந்ததாலும், அதை அடுத்து வருகின்ற திங்கள் கிழமை விடுமுறையாக இருப்பதாலும், குறைந்தது அடுத்த 4 இரவுகள் பிரியங்கா சிறைச்சாலையில் கழிக்க வேண்டும் என்பதாகும்.
மேல் நீதிமன்றத்தில், நிலைமையைக் கேட்டறிந்த சட்டத்தரணி நதிஹா, புத்தளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியை நாடி இருந்தார். துரதிஷ்டவசமாக இவ்விடயத்தில் முன் நிற்க புத்தளம் சட்டத்தரணிகள் சங்கம் மறுத்தது.
மேல் நீதிமன்ற நீதிபதியைச் சவாலுக்கு உட்படுத்தும் எந்த செயலும் தாங்கள் எதிர்கொள்ளும் எதிர்கால வழக்குகளைப் பாதிக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அங்கு வந்த சிங்கள சட்டத்தரணிகள் உட்பட அனைவரும், பிரியங்காவிடம் தாங்கள் அனுதாபத்தை மட்டும் தெரிவித்துவிட்டுச் சென்றனரே ஒழிய யாரும் அவருக்காக வாதாட முன் வரவில்லை.
அவர்களின் சுயநலம், மூன்று புலன்களையும் முற்றாக முடங்கச் செய்திருந்தன.
நேரம் வேகமாக நகர்ந்துகொண்டு இருந்தது. தனது சொந்த நலனைப் பாதுகாக்க, எல்லோரையும் போல் அமைதி கொள்வதா அல்லது நீதிக்காகப் போராடுவதா என்ற இரண்டு தேர்வுகளில் ஒன்றை நதிஹா மிக விரைவாக எடுத்தாக வேண்டி இருந்தது.
நோன்பு மதத்தின் புனித 27 ம் நாள் வணக்கத்திற்காக அதற்கு முந்திய இரவு அதிகாலை வரை விழித்திருந்த நதிஹா, நோன்புடன் இருந்தார்.
அன்றைய நாள் முழுவதும் ஒரு சொட்டு நீர் கூட பருகாமல் உடலளவில் சோர்ந்திருந்த நாதியாவின் காதுகளில் ஒரு இறை வசனம் காதோரம் அசரியாக ஒலித்தது
"இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருங்கள், அவ்வாறு இருப்பது, உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ பாதகமா இருப்பினும் சரியே! "
பல ஆண்கள் பூனை போல் பதுங்க, நதிஹா தனியாக நீதிபதி முன் தலை நிமிர்த்தி வாதாடத் தொடங்கினார்.
"கௌரவ நீதிபதி அவர்களே, இவ்வழக்கின் எதிராளி இதே நீதிமன்றத்தின் பலவருடம் பணியாற்றும் சட்டத்தரணி. எனவே இவர் விசாரணையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
மேலும் நீங்கள் கூறும் பிணை நிபந்தனையை உடனே நிவர்த்தி செய்யும் சாத்தியமும் இல்லை.
எனவே, ஒன்றில் பிணை நிபந்தனையை நீங்கள் தளர்த்த வேண்டும் அல்லது அவற்றை நிறைவு செய்யக் கால அவகாசம் தரவேண்டும்"
இவ்வாறான நியாயமான வாதம் பொதுவாக நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால் நீதிபதி அபர்ணா ஒற்றை வசனத்தால் அதை நிராகரித்து சட்டத்தரணி பிரியங்காவைச் சிறைக்குக் கொண்டு செல்லுமாறு பணித்தார்.
மேலும் பிரியங்காவிற்கு எவ்வித சலுகையும் வழங்கப்படக் கூடாது என்றும் சிறை அதிகாரிகளுக்கு மேலதிக உத்தரவும் பிறப்பித்தார்.
நீதிபதியின் நோக்கம் மிகத் தெளிவானதாக இருந்தது. சட்டத்தரணி பிரியங்கா சிறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை எல்லோரும் கவலையுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
நதிஹாவோ ஓய்வதாக இல்லை. நடைபெற்ற சம்பவத்தை எழுத்துமூலம் அறிக்கையாகத் தயாரித்து நடந்த அநீதியை ஊட்டங்களில் பகிரங்கப்படுத்தினார். அதில், நீதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தான் உணர்வதாகத் தெரிவித்தும் இருந்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு தொடர்பில் இவ்வாறான ஒரு கருத்தை எழுத்து மூலம் தெரிவிக்க அதீத துணிவு அவசியமானதாகும். இதில் சிறிய சறுக்கல்களும், அவரது சட்டத்தரணி தொழிலிற்கே உலை வைத்துவிடும்.
நதிஹாவைப் பொறுத்தவரை "... நீதியின் மீது நிலைத்திருங்கள்..." என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலை கொள்வதாக இல்லை.
நதிஹாவிடம் தகவல் பெற்ற சட்டத்தரணிகள் சங்க தலைமையகம், குறித்த தீர்ப்பை மேல் முறையீடு நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவது என்று தீர்மானித்தனர். ஆனால் அதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருந்தது. திங்கள் வரை நீதிமன்ற விடுமுறையாக இருந்தது.
தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.
அவசரத்தைப் புரிந்துகொண்டு, சட்டத்தரணிகள் சங்கம், ஒரு அரிதான வேண்டுகோளை விடுத்தது.
அதாவது, இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க,
திங்கள் - பொதுவிடுமுறை நாளில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைத் திறக்க வேண்டும்.
இவ்வழக்கை தாமதப்படுத்துவது, நாட்டில் நீதியின் நிர்வாகத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையும் அந்த கோரிக்கையில் இணைந்து இருந்தது.
விளைவு ?
ஒரு வரலாற்று நிகழ்வாக, மேல்முறையீட்டு நீதிமன்றம், விடுமுறை என்றும் பாராமல், நீதிக்காக அதன் கதவுகளைத் திறந்து கொண்டது.
திங்கள் கிழமை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி முஹம்மத் லபாருக்கு பெருநாளாக இருந்தபோதிலும், அவர் நீதிபதி பெர்னாண்டோவுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஒற்றை தொலைப்பேசி அழைப்பில், சட்டமா அதிபர் திணைக்களமும் அதன் பிரதிநிதிகளை அங்கு அனுப்பியிருந்தது.
விடங்களை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரியங்காவின் விடுதலைக்கு உடனடி உத்தரவைப் பிறப்பித்து மட்டும் இன்றி,
புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா உட்பட, சம்மந்தப்பட்ட தரப்பினரை ஏப்ரல் மாத இறுதியில் மேலதிக விசாரணைகளுக்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் வருமாறும் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவுடன், தனிப்பட்ட முறையில் வாரியபொல விரைந்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ, பிரியங்காவின் அநியாய சிறைவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த வழக்கு இலங்கை சட்ட வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், துணிச்சலான நபர்கள் உறுதியாக நிற்கும்போது நீதி மேலோங்கும் என்பதை இச் சம்பவம் காட்டியம் கூறுகிறது.
இங்கு இவை எல்லாவற்கும் மகுடமாகச் சட்டத்தரணி "நதிஹா அப்பாஸ்" மிளிர்கிறார்.
சுயநலமான மௌனத்தை விடவும், நீதிக்கான குரலை அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
ஈற்றில் ஒரு சத்தம் மட்டும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
“𝘚𝘵𝘢𝘯𝘥 𝘧𝘪𝘳𝘮 𝘪𝘯 𝘫𝘶𝘴𝘵𝘪𝘤𝘦” - நீதியின்மீது நிலைத்திருங்கள்.
0 comments :
Post a Comment